Skip to main content
Source
Maalaimalar
https://www.maalaimalar.com/news/national/1-crore-29-lakh-votes-for-nota-in-last-5-years-495535
Author
மாலை மலர்
Date
City
New Delhi

தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் குறித்து ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு மேற்கொண்டது.

அதில், கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு மொத்தம் 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் மட்டும் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975. இதன் சதவீதம் 1.06 ஆகும்.

சட்டசபை தேர்தல்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 ஓட்டுகள்தான், நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டுகள் ஆகும்.

மிசோரமில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 2 ஆயிரத்து 917 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள்.

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51 ஆயிரத்து 660 ஓட்டுகள்தான் அதிகபட்ச ஓட்டுகள்.

லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள் ஆகும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


abc